எல்.ஐ.சி., முதலீட்டாளர்களுக்குரூ. 77 ஆயிரம் கோடி இழப்பு மும்பை : கடந்த நான்கு வர்த்தக நாட்களில், எல்.ஐ.சி., நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ளவர்கள், கிட்டத்தட்ட 77 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் கூடுதலான இழப்பை சந்தித்து உள்ளனர். கடந்த வாரத்தின் கடைசி வர்த்தக நாளான வெள்ளிக்கிழமை அன்று, எல்.ஐ.சி., பங்குகள் விலை மேலும் இரண்டு சதவீதம் சரிவைக் கண்டதை அடுத்து, முதலீட்டாளர்கள் கூடுதல் இழப்புக்கு ஆளாகியுள்ளனர்.இந்நிறுவன பங்கின் வெளியீட்டு விலை 949 ரூபாயாக இருந்த நிலையில், 13 சதவீதம் அளவுக்கு சரிவைக் கண்டு, 826 ரூபாயாக குறைந்துவிட்டது. இதன் காரணமாக, இந்நிறுவன பங்கு முதலீட்டாளர்கள், 77 ஆயிரத்து 600 கோடி ரூபாய் இழப்பை சந்தித்து உள்ளனர்.அதுமட்டுமின்றி; சந்தை மதிப்பில் ஐந்தாவது இடம் என்ற நிலையிலிருந்தும் எல்.ஐ.சி., கீழிறங்கி உள்ளது. இருப்பினும், அடிப்படையில் மிகவும் வலுவான நிறுவனமாக எல்.ஐ.சி., இருப்பதால், நீண்டகால அளவில் நல்ல லாபத்தை அள்ளித் தரும் நிறுவனமாக எல்.ஐ.சி., இருக்கும் என, சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.