குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ.1,000 - அமைச்சர் குட் நியூஸ்! 1157296631


குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ.1,000 - அமைச்சர் குட் நியூஸ்!


திமுக தேர்தல் வாக்குறுதியின்படி, குடும்பத் தலைவிகளுக்கு விரைவில், மாதந்தோறும் 1,000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்படும் என, தமிழக நிதித் துறை அமைச்சர் பிடிஆர். பழனிவேல் தியாகராஜன் தெரிவித்து உள்ளார்.

தமிழகத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதில் திமுக மட்டும் தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. இதைத் தொடர்ந்து, தமிழக முதலமைச்சராக, முதன் முறையாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு மே மாதம் 7 ஆம் தேதி பொறுப்பேற்றார்.

இந்தத் தேர்தலில், திமுக தேர்தல் அறிக்கையில், திமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டு இருந்தது. எனினும், திமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், இது தொடர்பான அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. இந்த விவகாரத்தை கையில் எடுத்த அதிமுக - பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து தமிழக மக்களை திமுக ஏமாற்றி விட்டதாக குற்றஞ்சாட்டின.

இதற்கிடையே, நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் பேசிய தமிழக நிதித் துறை அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன், நிதி நிலைமை சரியானதும், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று, மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய நிதித் துறை அமைச்சர் பிடிஆர். பழனிவேல் தியாகராஜன், திமுக தேர்தல் வாக்குறுதியின்படி, குடும்பத் தலைவிகளுக்கு விரைவில், மாதந்தோறும் 1,000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்படும் என்றும், இதற்கான விவரங்களை சேகரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றும் தெரிவித்தார்.

Comments

Popular posts from this blog

Moroccan Eggplant Salad Zaalouk